Saturday, May 19, 2012

இதய நோய்களை தடுக்கும் சொக்லேட்

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சொக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. அந்த சொக்லேட் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
தினசரி சிறிதளவு சொக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது.
சொக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சொக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.
இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சொக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சொக்லேட் அளிக்கப்பட்டு வந்தது.
தினசரி ஒன்று என்ற அளவில் சொக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவீதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவீதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பை தடுப்பதில் சொக்லேட்டுக்கு பங்கில்லை என்று தெரிந்தது.
முதல்கட்ட 6 ஆய்வுகளில் சொக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சொக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெசர்ட் என பால் அதிகமுள்ள சொக்லேட், சாக்கோ அதிமுள்ள சொக்லேட்(டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை.
எனினும் சொக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் சொக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன.
அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கலோரி குறைந்த தரமான சொக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயை தடுக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment