நீரழிவுக்கு உணவு முறையும், பாரம்பரியமும் காரணமாகின்றன. பாரம்பரியத்தில், தாத்தா பாட்டி, தாய் தந்தைக்கு நீரிழிவு நோய் இருந்தால், அவர்களது பிள்ளைகளுக்கும் நீரழிவு வர அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் நீரழிவை தடுக்கவும் முடியும், தள்ளிப் போடவும் முடியும். பொதுவாக பலரும் நீரழிவு வந்தால்தான் உணவுக் கட்டுப்பா
ட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். இது தவறு. நீரிழிவு வராமல் இருக்க வேண்டுமானால் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது.

அதன்படி உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தியானம், யோகா, மன அமைதி போன்றவற்றால் நீரழிவு வராமல் தடுக்கலாம்.
முதலில் நாம் உண்ணும் உணவில் எல்லா விதமான சத்துக்களும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது.
அரிசி உணவைக் குறைத்து, அதற்கு ஈடாக நார்சத்து மிக்க காய்கறிகள், கீரைகளை, இனிப்புத் தன்மை குறைந்த பழங்களை நம் உணவில் அதிகமாக சாப்பிட வேண்டும்.
அதே சமயம், புரதச்சத்து அதிகம் உள்ள பருப்பு, பால் மற்றும் மாமிச வகைகளையும் அளவுக்கேற்றபடி சாப்பிடலாம். வறுவல், பொரியலுக்கு பதிலாக ஆவியில் வேக வைத்தது, ஊறவைத்து முலை கட்டியது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.
அசைவ உணவுப் பிடித்தவர்கள் மீன், தோலுரித்த கோழி, முட்டையின் வெள்ளைக் கரு போன்றவற்றை அளவுக்கேற்றபடி சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவாகவே உள்ளது.
மேலும், ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது அரை லிட்டர் பால் வரை குடிக்கலாம். அதுவும் பாலை நன்கு காய்ச்சிக் குடிப்பது மிகவும் அவசியமாகிறது.
எண்ணெயை தாளிப்பதற்கு மட்டுமே குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. வறுப்பதற்கும், பொறிப்பதற்கும் எண்ணெயைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கும், திண்பண்டங்கள் அதிகம் கொடுக்காமல், காய்கறிகள், கீரைகள், பழங்கள், கொட்டை வகைகள் போன்ற உணவு வகைகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதேப்போல நடைப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது. மாடிப் படிகளில் ஏறி இறங்குவதும் மிகச் சிறந்த பயிற்சிதான். ஒரு நாளைக்கு ஒரு வேளை தொடர்ந்து 30 நிமிடம் நடப்பதும், ஒரு வேளைக்கு 15 நிமிடம் என இரண்டு வேளை நடப்பதும் அவரவர் வசதியைப் பொருத்தது.
நீண்ட தூரம் நடக்க முடியாதவர்கள் அதாவது வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாதவர்கள், யோகா ஆசிரியர்களிடம், நடப்பதற்கு ஈடான சில ஆசனங்கள் உள்ளன. அவற்றை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். தியானம், யோகா போன்றவை நமது ஆரோக்கியத்திற்கு மேலும் உறுதுணையாக அமைகிறது.
மனதை அமைதியாக வைத்திருப்பதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்கள் வேலை நிமித்தமாகவோ, வீட்டிலோ அதிக அழுத்தம் தரக் கூடிய விஷயங்கள் நடந்தால், உடனடியாக அதற்கு தீர்வு கண்டு, மன அமைதிக்கு வழியேற்படுத்துங்கள்.
நிம்மதியான தூக்கமும் மிகவும் அவசியம். இரவில் 9 மணிக்குள்ளாக இரவு உணவு முடித்துவிடுவதும், அதன்பிறகு தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்துவிட்டு லேசான நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு தூங்கச் செல்லலாம். இதனால் நிம்மதியான உறக்கம் உங்களை தழுவும் என்பதில் சந்தேகம் இல்லை.
எப்போதும் உங்களை நீங்களே புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழியைக் கையாள வேண்டியது உங்கள் பொறுப்பு.
நீரழிவற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்.
No comments:
Post a Comment