நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய் கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன.
சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய் கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக வைரஸ் நோய் கிருமிகள் அதிகம் தாக்கக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த பனிக்காலத்தில் தான் நெஞ்சில் சளி, தொண்டையில் டான்ஸில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சுத் திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன.
இன்னும் இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா ஜுரம், ஒற்றைத் தலைவலி ஆகிய பல நோய்கள் காணப்படுகிறது. அதோடு இந்த மாதிரியான பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகி விடுகிறது.
காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் மூச்சிரைப்பு நோய் அதிகம் வாட்டும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம்.
சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வரும். பனி காலத்தில் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் நோய் கிருமிகளால் அதிகம் தோன்றுகின்றன. பெரும்பாலும் இவை கொசுக்கள் மூலமே அதிகம் பரவுகின்றன.
மலேரியா நோய் எதனால் ஏற்படுகிறது? பென் அனோபிலிஸ் கொசுக்களால் மலேரியா நோய்க் கிருமிகள் பரவுகின்றன.
இவைகள் தேங்கிய நீரில் வளர்ந்து மனித ரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன.கொசுக்கடி மூலம் நம் உடலை வந்தடைந்த கிருமிகளால், ஒரு வாரங்களில் நோய் தீவிரமடைந்து, உடல் பாதிக்கப்படுகிறது.
மலேரியாக் கிருமி ரத்த ஓட்டத்தில் பிரவேசித்து சிவப்பு அணுக்களில் ஊடுருவி ஹீமோகுளோபினை அழித்து பல்கிப் பெருகும். இதன் விளைவாக சிவப்பு ரத்த அணுக்கள் நிலைகுலைந்து கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், மூளை, மண்ணீரல் போன்ற உறுப்புகள் செயலிழக்கின்றன.
அறிகுறிகள்: மலேரியாவின் பொதுவான அடையாளம் காய்ச்சல். மலேரியா நோய்க் கிருமியின் எந்த வகை, உடலில் ஊடுருவியுள்ளது என்பதைப் பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபடும். மலேரியா மரணத்தை விளை விக்கக்கூடிய நோய்.
பரிசோதனை: ரத்தப்பரிசோதனை செய்வதன் மூலம் நோயின் பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் மூலம் உறுதி செய்து கொள்ளும் முன்னதாகவே மலேரியாவுக்கான மருத்துவத்தை ஆரம்பித்துவிடலாம்.
நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட மருந்தை முழுவதுமாக சாப்பிட வேண்டும். உடல் நலம் பெற்றுவிட்டதாகக் கருதி, இடையில் மருந்தை நிறுத்தினால் நோய் மீண்டும் வரலாம்.
கல்லீரலில் தங்கியிருக்கும் கிருமிகள் மருந்து எதிர்ப்பு சக்தியை பெற்றுவிட்டால், மருந்தின் சக்தி குறைந்துவிடும். மீண்டும் மீண்டும் மலேரியா வந்தால் பலவீனம், சோர்வு, ரத்தச்சோகை, லேசான மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். நோயாளி பூரண ஓய்வு எடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
No comments:
Post a Comment